நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்கவிருந்த நிலையில், வரும் 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவையை, பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி தொடங்கி வைத்தார். வடகிழக்கு பருவமழை காரணமாக நிறுத்தப்பட்ட இந்த கப்பல் சேவை, நாளை முதல் மீண்டும் தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை என்ற கப்பல், இலங்கை காங்கேசன்துறைக்கு நாளை தனது முதல் பயணத்தை தொடங்கவிருந்தது. இந்நிலையில், கப்பலை இயக்குவதற்கான அனுமதி மற்றும் நாகைக்கு கப்பல் வருகை தாமதமானதன் காரணமாக, நாளை தொடங்கவிருந்த பயணிகள் கப்பல் சேவை, வரும் 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் 16 வரை பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்த பயணிகளின் பயணத் தேதி, வரும் 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பயணிகள் விரும்பினால் பயணக் கட்டணம் திரும்பத் தரப்படும் எனவும், சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.