மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என ராதாகிருஷ்ணன் உறுதியளித்திருந்த நிலையில் இன்னும் பணி வழங்கப்படவில்லை என ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன் ராட்வீலர் நாய்கள் கடித்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் தந்தை ரகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சிறுமியை அடிக்கடி அழைத்து வருவது கடினமாக உள்ளதாகவும், எனவே சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகே சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும் கூறினார்.
சிறுமியின் மருத்துவச் செலவுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் நாயின் உரிமையாளர் சிறுமியின் பெயரில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.