நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பங்கானில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 4 கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மையான தொகுதிகள் கிடைத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
பாஜக 400 தொகுதிகளில் வெல்வதை முன்னிறுத்தி தான் எஞ்சிய தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அமித் ஷா கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்வதாகவும், அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவில் புகலிடம் தேடுபவர்களுக்கு குடியுரிமை வழங்கத்தான் அந்த சட்டமே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல என்றும் அமித் ஷா தெளிவுபடக் கூறினார்.
சிஏஏ விவகாரத்தை வைத்து மம்தா பானர்ஜி வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதாகக் கூறிய அமித் ஷா, சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் குடியேறுபவர்களுக்கு மம்தா பானர்ஜி குடியுரிமை அளிப்பதாகக் குற்றம்சாட்டினார்.