நாகை முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்குவதாக இருந்த நிலையில், வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவையை, பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி தொடங்கி வைத்தார். பின்னர் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டது.
மீண்டும் இந்த கப்பல் போக்குவரத்து கடந்த 13-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சட்ட அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இரண்டாவது முறையாக கப்பல் போக்குவரத்து தொடங்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகை – காங்கேசன் துறைமுகம் இடையே நாளை தொடங்கவிருந்த பயணிகள் கப்பல் சேவை, வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.