2019 ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் படி, இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பித்த முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 14 பேருக்கு இந்திய குடியுரிமைக்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய்குமார் பல்லா வழங்கினார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த இந்துகள் ,சீக்கியர்கள் ,பௌத்தர்கள்,சமணர்கள் , பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையை எளிதாக்க ஏற்கெனவே இருந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைக்கும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி இந்தச் சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்குவதற்காக,மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது .
மேலும் ஆன்லைனில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களையும், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும், அந்தந்த பகுதி உயர் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு பிரமாண சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதிய குடியுரிமை திருத்த சட்டத்தின் படி குடியுரிமை கேட்டு , இதுவரை 25,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சீக்கியர்கள், ஹிந்துகள் உள்ளிட்ட 14 பேருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, இந்திய குடியுரிமைக்கான ஆணையை வழங்கினார். மேலும் விண்ணப்பித்த 300க்கும் மேற்பட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் தபன் குமார் டேகா மற்றும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் ஆகியோர் கலந்து கொண்டனர். குடியுரிமை பெற்றவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துகள் என்று கூறப்படுகிறது.