நடப்புக் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கான சீர்மிகு பாராட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
2023 – 2024 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 94 புள்ளி 56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் மட்டும் 91 புள்ளி 02 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
குறிப்பாக 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளன. மேலும், தமிழ்ப் பாடத்தில் 35 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91 புள்ளி 55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87 புள்ளி 90 ஆகும். மேலும், ஆயிரத்து 364 அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளன. தமிழ் பாடத்தில் மட்டும் 8 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
எனவே, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டும் வகையில், சென்னையில் ஒரு சீர்மீகு விழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்விழாவில் தமிழ்ப்பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 43 பேர் கௌரவிக்கப்பட உள்ளனர்.