கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, 6-வது கைவிரலை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செறுவன்னூர் மதுரா பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கையில் 6 விரல்கள் இருந்தன.
இந்த 6-வது விரலை அகற்றுவதற்காக சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமியின் 6-வது கைவிரலை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமியை அழைத்து வந்தபோது, சிறுமியின் வாயில் கட்டு போடப்பட்டிருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மருத்துவர்களிடம் விசாரித்தபோது, சிறுமியின் நாக்கில் பிரச்சினைகள் இருப்பதைக் கண்டு பிடித்ததால் அதற்காக அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறிய நிலையில், பின்னர் தவறுக்காக வருத்தம் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் புகாரளித்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக விளக்கமளிக்குமாறு, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு, அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.