மூன்று ஆண்டுகளில் விவசாய நிலங்களில் இருந்து கிட்டத்தட்ட 60 லட்சம் மரங்கள் மாயமாகி விட்டதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன்படி, 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில், விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 50 லட்சத்து 80 ஆயிரம் முழுமையாக வளர்ந்த மரங்களை இந்தியா இழந்திருக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
டென்மார்க் நாட்டின், கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் NATURE SUSTAINBILITY என்ற இதழுடன் இணைந்து, செயற்கைக்கோள்-பட அடிப்படையிலான பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
காணாமல் போன மரங்கள், தவறாக வகைப்படுத்திய மரங்கள் மற்றும் முழுமையாக வளர்ந்த பெரிய மரங்கள் என மூன்று வகைகளில் மரத்தைக் கண்டறிவதற்கான வழிமுறைகளை பின்பற்றியும், RapidEye மற்றும் PLANET SCOPE ஆகிய இரண்டு வகையான செயற்கைக் கோள் படங்களின் மூலம் மரங்களைக் கணக்கீடு செய்கிறது இந்த ஆய்வு.
அதன் படி 2010ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மீண்டும் படம் எடுக்கப்பட்டது.
2010-2011 ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை, 2018-2022 முடிவுகளுடன் ஒப்பிடும் போது, பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறியப்பட்டதாக சொல்லும் இந்த ஆய்வறிக்கை, அதன் அடிப்படையில் இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் காணாமல் போனதாக தெரிவித்திருக்கிறது.
அதாவது இந்தியாவில் வேளாண் காடுகள் என்ற விவசாய நிலங்களில், முழுமையாக வளர்ந்த மரங்களில் கிட்டத்தட்ட 11சதவீத மரங்களைக் காணவில்லை.
இந்த மரங்கள் எல்லாம் அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் , இந்த ஆய்வில், இந்தியாவின் தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் பெருமளவில் நன்கு வளர்ந்திருந்த பெரிய மரங்கள் காணாமல் போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.
கிழக்கு மத்திய பிரதேசத்தில் குறைந்த அளவே மரங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் 56 சதவீதம் விவசாய நிலங்களாகவும் 20 சதவீத நிலம் காடுகளாகவும் உள்ளன. உலகின் மிகப் பெரிய விவசாய நாடாக விளங்கும் இந்தியாவில் இந்த ஆய்வு ஒரு மேம்போக்கான ஆராய்ச்சியாக இருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் விவசாய காடுகள் சமீப காலமாக நெல் வயல்களாக மாறி இருப்பதாலும் இந்த ஆய்வறிக்கை மரங்களைக் காணவில்லை என்று கூறி இருக்கிறது என்றும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.