என்ன தான் உழைத்தாலும் , உயர்பதவி கிடைக்கவில்லையே ? என்ன தான் சம்பாதித்தாலும் சுகபோக வாழ்வு அமையவில்லையே ? என்ற ஏக்கம் இல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லி விடலாம். நினைத்த இடத்தில் நினைத்த உயர்பதவி கிடைக்கவும் , சுகபோக வாழ்வு பெறவும் ஒரு கோயில் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. அந்த திருக்கோயிலைப் பற்றி இப்போது பார்ப்போம்.
புண்ணியம் மிகுந்த பாண்டி நாட்டில் உள்ள பாடல் பெற்றத் தளங்களில் ஒன்பதாவது தலமாக விளங்குகிறது திருவாடானை திருத்தலம். தேவகோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் அமைத்திருக்கிறது இக்கோயில்.
அஜகஜபுரம் என்று வடமொழியில் வழங்கப்படும் இந்தக் கோயில், நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது என்றும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது.
இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் என்றும், சூரியன் வணங்கியதால் ஆதி ரத்தினேசுவரம் என்றும் ,பிருகு முனிவரின் சாபம் நீக்கியதால் ஆடானை என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
முன்னொரு காலத்தில்,பிருகு முனிவர், நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாசரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற துர்வாசர், பிருகுவை ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார்.
தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்ட பிருகு முனிவருக்கு , சூரியனால் வழிபட்ட ஆதி ரத்தினேசுவர மூர்த்தியை வணங்கி வழிபட்டு வர சாபம் நீங்கும் என்று வரமளித்தார்.
பிருகு முனிவரும் ,இக்கோயிலுக்கு வந்து, சூரிய தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றார். எனவே இத்தலத்து இறைவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார். இவ்வூரும் திருவாடானை என்று.
பிரம்மதேவர் கூறியபடி,ஒரு காலத்தில், சூரியன் இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, ரத்தினமயமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.
இதன் காரணமாக, இன்றும் இக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் பாலாபிஷேகம் செய்யும் போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாக ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், மாசி மாதத்தில் சூரியன் தனது கிரணங்களால் மூலவரையும் அம்பாளையும் வணங்குகின்றான்.
சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோயிலின் 9 நிலைகளுடன் 130 அடி உயரம் கொண்ட அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரம் பிரம்மாண்டமாக இருக்கிறது.
நீண்ட மதில் சுவர்களும்,பெரிய வெளிப் பிரகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களுடன் கம்பீரமான மண்டபமும் உடைய இத்தலம் பாண்டிய நாட்டு சிவஸ்தலங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
சுவாமி சன்னதியும், அம்பாள் சன்னதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் இறைவன் ஆதிரத்தினேசுவரராகவும், அம்மை அம்பாயிரவல்லியாகவும் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு சுகபோக வாழ்வளித்து கொண்டிருக்கிறார்கள்.
சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வருண தீர்த்தம் அமைந்துள்ள இத்தலத்து தலமரமாக வில்வம் விளங்குகிறது.
சூரியன் வழிபட்ட திருத்தலம் என்பதால் இத்தலத்து இறைவனை வணங்கினால் , அரசு துறைகளில் மட்டும் இன்றி , எந்த துறை ஆனாலும் அதில் உச்சப் பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இத்தலத்து அம்மை சிநேக வல்லி என்ற திருநாமத்துடன் மகா லட்சுமி அம்சத்துடன் விளங்குவதால் , இங்கே வந்து வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் அனைத்து சுகபோகங்களும் எளிதாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்தலத்து தேவாரப் பாடலில் தான் திருஞான சம்பந்தர் , இறைவனை வணங்கினால் வினைகளால் வரும் துன்பங்கள் வாரது என்று உறுதி அளித்திருக்கிறார் என்பதும் இக்கோயிலின் சிறப்பு.