இடி, மின்னல் மற்றும் கனமழையின்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள தகவலில், இடி மின்னலின்போது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூட வேண்டும் என தெரிவித்துள்ளது. வீட்டிற்கு வெளியே பொருட்களைப் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மின்னல், புயலின்போது மின்னோட்டத்தை ஏற்படுத்தக்கூடிய மின்சாரத்தை அணைத்து வைக்க வேண்டும் என்றும், மின் கம்பங்கள் மீது மரங்கள் அல்லது பிற குப்பைகள் படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தின்போது நீர் நிலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், குடிசைகளில் வசிப்போர்கள் உடனடியாக பாதுகாப்பான தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
உலோக கட்டமைப்புகள் உள்ள கட்டுமானங்களில் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மழை நேரங்களில் வெளியூர் பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.