“தேர்தல் நெறிமுறைகள் அமலில் இருக்கும் போது, தமிழகத்தில் யானைகள் வழித்தடம் குறித்து அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏன்?” என திமுக அரசுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள், 161 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பட்டுள்ளார்.
“வனத்துறையின் இந்த அறிவிப்புக்கு எதிராக கூடலூரைச் சேர்ந்த 46 கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றார்கள்” என்றும், “கூடலூரில் தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடும், குத்தகை காலம் முடிந்த பகுதிகளை கைப்பற்றி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும், “இதை செயல்படுத்தினால், பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் வெளியேற நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த “அறிக்கை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. எங்கும் தமிழ் எதிலும் என பீற்றிக் கொள்ளும் திமுகவின் லட்சணம் இதுதானா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களை மத்தியஅரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழக அரசு 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில், “தமிழக அரசின் அறிக்கையில் பல முரண்பாடுகள் உள்ளன. எனவே, அப்பாவி மக்களின் நிலங்களை அபகரிக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.