சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தொடங்கியுள்ள கேரளா அரசை தடுத்து நிறுத்தவிட்டால் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என பொள்ளாச்சி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி ஆறு பல்வேறு கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
கேரளாவில் உற்பத்தியாகும் பாம்பாறு, தேனாறு, சின்னாறு, மற்றும் சிலந்தை ஆறு ஆகியவை இணைந்து தமிழக பகுதிக்குள் அமராவதி ஆறாக ஓடும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் அனுமதி இன்றி கேரள அரசு தடுப்பணையை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமராவதி பாசன விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறையும் என வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், தடுப்பணை கட்டும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தாவிட்டால் உடுமலை, தாராபுரம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.