இண்டியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது என்றும், அக்கூட்டணி மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், “மகளிர் சக்தியுடனான உரையாடல்” என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ஆயிரக்கணக்கான பெண்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், நாட்டின் கொள்கைகளை வகுப்பதில் பெண்களை முன்னிலைப்படுத்துவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார்.
பெண்கள் இல்லாமல் வீட்டையே வழிநடத்த முடியாது என்கிறபோது நாட்டை எவ்வாறு வழிநடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பிய மோடி, கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸும், சமாஜ்வாதியும் இதனைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் விமர்சித்தார். தாயின் ஆசிர்வாதமின்றி தாம் வேட்புமனு தாக்கல் செய்தது இதுவே முதல்முறை என்றும், கங்கை தாய் தம்மை தத்தெடுத்துக் கொண்டதாகவும் பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.