ஹைதராபாத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், ஹைதராபாத் மெட்ரோவை 2026ம் ஆண்டுக்குப் பிறகு விற்க முடிவு செய்திருப்பதாக அதை நிர்வகிக்கும் L&T நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
மெட்ரோ இரயில் திட்டம் என்பது நகரங்களின் வாகன நெரிசலை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டது. பெரிய பெரிய நகரங்களின் இயங்கும் இந்த மெட்ரோ இரயில் சேவை முதன் முதலாக லண்டனில் கொண்டுவரப் பட்டது.
தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா என வளர்ந்த நாடுகளில் மெட்ரோ திட்டம் விரிவடையத் தொடங்கியது. இந்தியாவில் கொல்கத்தாவில் முதல் மெட்ரோ வந்தாலும் கூட , டெல்லியின் முதல் மெட்ரோ இரயில் 2002ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியாவின் மெட்ரோ ரயில் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வந்தாலும் , மெட்ரோ நிறுவனங்கள் இன்னமும் லாபம் பெறவில்லை என்பதே கசப்பான உண்மை .
ஏன் மெட்ரோவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை L&T நிறுவனத்தின் முழுநேர இயக்குனரும், தலைமை நிர்வாக தலைவருமான சங்கர் ராமன் சொல்லிருக்கிறார். ஹைதராபாத் மெட்ரோ இரயில் திட்டத்தில் 90 சதவீத பங்குகளை L&T நிறுவனமும் மீதமுள்ள 10 சதவீத பங்குகளை தெலங்கானா அரசும் கொண்டுள்ளன.
தெலங்கானா காங்கிரஸ் அரசு பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனாலேயே, மெட்ரோவில் பெண்கள் பயணிப்பது குறைந்து விட்டதால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனால், நிறுவனமும் நஷ்டத்தில் இயங்குகிறது.
ஹைதராபாத்தில் கடந்த நவம்பரில் 5.50 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது 4.80 லட்சமாக குறைந்துள்ளது முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த L&T நிறுவன தலைமை நிர்வாக தலைவருமான சங்கர் ராமன், ஹைதராபாத் மெட்ரோவின் பங்குகளை 2026க்குப் பின் விற்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
13000 கோடி ரூபாய் கடனில் இருக்கும் ஹைதராபாத் மெட்ரோ, தெலங்கானா அரசிடம் வட்டியில்லா கடனாக 3000 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், மெட்ரோவின் சில நிலங்களை விற்று நஷ்டத்தை சரி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் சங்கர் ராமன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலவசத் திட்டங்கள் மாநில கஜானாவை எப்படிக் கெடுக்கின்றன என்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாநிலங்கள் நிதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் , இலவசங்களை அறிவித்து மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன என்று கூறியிருந்தார்.
தேர்தலுக்காக அரசுக் கஜானாவை காலியாக்க எந்தக் கட்சிக்கும் உரிமை இல்லை என கடுமையாக பிரதம்ர் குற்றம்சாட்டியிருந்தார்.
பிரதமர் மோடி தெரிவித்தது போல , ‘ ஒரு நகரத்தில் மெட்ரோவை நிர்மாணித்து, நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி ஒருபுறம் வேகமாக அதிக முதலீட்டில் நடைபெற்று வருகின்றன . அதே சமயம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை உறுதியளிக்கும் மாநில அரசுகளின் திட்டங்கள் மெட்ரோவின் நஷ்டத்துக்கு மட்டுமின்றி ,நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கின்றன என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.