வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது.
முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழாவை ஒட்டி, சுவாமிக்கு உதயமார்த்தாண்ட பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமியை தரிசித்தனர். பக்தர்கள் ஆண்டு தோறும் சமைக்கும் அசைவ உணவிற்கு இந்தாண்டு தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விழாவை ஒட்டி மே 13ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிலையில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் தங்கவேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொரடு மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேல் குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதே போல, வடபழனியில் உள்ள முருகன் கோயிலிலும் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதையடுத்து வைகாசி விசாகத்தை ஒட்டி காலை முதலே சுவாமிக்கு பால், தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத சன்முகர் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.