பால் கொள்முதல் அளவை உயர்த்தி, பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆவின் நிர்வாகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 40 லட்சம், லிட்டரிலிருந்து 27 லட்சம் லிட்டராக குறைந்திருப்பதாகவும், இதனால், பால் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதாக தெரிவித்தார்,
மேலும், கலப்பட புகார்கள், எடை குறைவு, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம் என ஆவின் நிர்வாகத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த குளறுபடிகளே உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் குறைய காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததாகவும் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து,கொள்முதல் பாலுக்கு நியாயமான தொகையை வழங்கவோ, மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்காததால் தனியார் பால் நிறுவனங்களை வரவேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் பால் கொள்முதல் அளவை உயர்த்தி, பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தடையின்றி தொடர்வதை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.