தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தமக்கு சிபிசிஐடி போலீசார் அனுப்பியுள்ள சம்மனிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் எடுத்து வந்த 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில், பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், எந்த காரணமும் தெரிவிக்காமல் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும், பாஜக மற்றும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.