எப்போதுமே விண்வெளி தான் உலகின் இறுதி பகுதியாக மட்டும் இல்லாமல் ஆச்சரியப் படுத்தும் இடமாகவும் இருக்கிறது. விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மட்டுமே விண்வெளியில் பயணிக்க முடியும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. அண்மையில் ஆந்திராவைச் சேர்ந்த கோபி என்பவர் விண்வெளிக்குச் சுற்றுலா சென்று வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியிருக்கிறார். இதன் மூலம் இனி யாரும் விண்வெளி சுற்றுலா சென்று வரலாம். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…
பொழுது போக்காகவும் , சாகச விளையாட்டாகவும் அல்லது ஓய்வுக்காகவும்,தனிநபர்கள் விண்வெளிக்கு செல்வதே விண்வெளி சுற்றுலா. பல தனியார் விண்வெளி நிறுவனங்கள், விண்வெளிக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு மகிழ்ச்சியான பயணச் சேவையை வழங்குகின்றன.
ஏற்கெனவே ஆறு முறை வெற்றிகரமாக விண்வெளி சுற்றுலா பயணத்தை நடத்தியுள்ள ப்ளூ ஆர்ஜின் என்ற நிறுவனம், கடந்த வாரம் ஏழாவது முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு பயணிகளை அழைத்து சென்று திரும்பி இருக்கின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் என்ற விண்கலன் வாயிலாக சென்ற இக்குழுவில் ஆந்திராவைச் சேர்ந்த கோபியும் இடம்பெற்றார். இதன் மூலம், விண்வெளி சுற்றுலாவுக்கு சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்று விட்டார்.
ஏற்கெனவே, 1984 ஆம் ஆண்டு, இந்தியாவின் ராணுவ கமாண்டர் ராகேஷ் சர்மா முதல்முறையாக விண்வெளிக்குச் சென்ற, முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத் தக்கது.
கர்மன் கோடு என்று அழைக்கப்படும் கோடு தான், பூமியின் காற்று மண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லைக் கோடு.
இந்த கோட்டுக்கு கீழே பறந்தால் அது விமானம். இந்தஎல்லைக் கோட்டைத் தாண்டி பறந்தால் அது விண்கலம்.
இந்த எல்லைக் கோட்டைத் தாண்டி, பூமியிலிருந்து சுமார் 105 கிலோ மீட்டர் வரை விண்கலம் மேலே சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் இந்த பயணம் ஒரு குறுகிய தூர விண்வெளி சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்கது.
புறப்பட்டது முதல் தரையிறங்கும் வரை, முழு பயணமும் சுமார் பத்து நிமிடங்களில் இந்த விண்வெளி பயணம் முடித்து விடும்.
இந்த குறுகிய தூர விண்வெளி சுற்றுலாவில் பூமியை சுற்றி வர முடியாது. ஆனால் நீண்ட தூர விண்வெளி சுற்றுலாவும் உள்ளது . அதில் பூமியில் இருந்து 400 கிலோமீட்டருக்கு மேல் பறந்து, பூமியைச் சுற்றி வரலாம். மேலும் விண்வெளியில் உள்ள ஆய்வு நிலையங்களில் சில நாட்கள் தங்கியும் பூமிக்குத் திரும்பலாம்.
எல்லாம் சரி இந்த 10 நிமிட விண்வெளி சுற்றுலாவுக்கு எவ்வளவு செலவாகும் என்ற கேள்விக்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் எந்த அதிகாரப் பூர்வமான தகவலைத் தெரிவிக்கவில்லை.
எனினும், இதே சேவையைத் தரும் இன்னொரு நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் தகவல் படி சுமார் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவாகும் என்று அறிய முடிகிறது. நீண்ட தூர விண்வெளி சுற்றுலா சென்று, அங்கு விண்வெளி நிலையத்தில் தங்கி திரும்ப, சுமார் 160 கோடி ரூபாயில் இருந்து 210 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரியவருகிறது
இந்நிலையில், 2028-ஆம் ஆண்டுக்குள் சீன அரசும் இந்த விண்வெளி சுற்றுலா சந்தையில் கால் பதிக்கிறது. சீன வணிக விண்வெளி நிறுவனமான சி.ஏ.எஸ் ஸ்பேஸ் தனது “விண்வெளி சுற்றுலா வாகனம்” முதலில் 2027ம் ஆண்டில் விண்ணில் பறக்கும் என்றும், 2028 ஆம் ஆண்டில் விண்வெளியின் விளிம்பிற்கு சென்று திரும்பும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் நான்கு ஜன்னல்கள் உள்ள ஒரு சுற்றுலா அறை கொண்ட சீன வணிக விண்வெளி விண்கலத்தில், ஒரே நேரத்தில் ஏழு பயணிகள் வரை பயணிக்க முடியும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த விண்வெளி சுற்றுலாவுக்காக , பிரத்யேகமாக சீனாவில் ஏரோஸ்பேஸ் தீம் பூங்காபு திதாக கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு 100 மணி நேரத்திற்கும் ஒரு விண்கலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு விண்வெளி சுற்றுலா செல்லும் என்று கூறுகிறார்கள்.
விண்வெளி சுற்றுலா ஆசையாக தான் இருக்கிறது என்றாலும், இப்போதைக்கு இந்த சுற்றுலாவைப் பெரும் பணக்காரர்ககள் மட்டுமே அனுபவிக்க முடியும். இது தான் நிதர்சனமான உண்மை.