மக்களவை தேர்தலுக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு மே. 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் மாலையுடன் ஓய்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 5 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், 6-ஆம் கட்ட தேர்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அந்த வகையில் 6-ஆம் கட்ட தேர்தலானது 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 866 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது.
இதில், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப்பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேலும், தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும், வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.