சித்த மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்து மருத்துவ முறையை மேம்படுத்த வேண்டும் என ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் மருத்துவ மரபுகள் என்ற தலைப்பில் பயிலரங்கக் கூட்டம் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
இதில் சித்த மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம், நாடி வர்மம் உள்ளிட்ட முறைகள் விளக்கமளிக்கப்பட்டது.
இதன் நிறைவு விழாவில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி ராஜேந்திரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வெளியில் தெரியாத துறையாக சித்தமருத்துவ துறை உள்ளது என்றும், சித்த மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்து அதன் ஆவணங்கள் அடிப்படையில் மருத்துவ முறையை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.