ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.. இது குறித்த செய்தி தொகுப்பு ஒன்றை பார்க்கலாம்..!
பாராலிம்பிக்ஸ் தொடர் மூலம் பார் போற்றும் நாயகனாக உருவானவர் தான் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. உயரம், தமக்கு இருக்கும் குறை இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இந்தியாவுக்காக பாரா தடகள போட்டிகளில் உலகம் முழுவதும் கலக்கி வருகிறார்.
உயரம் தாண்டுதலில் 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கமும், 2021 டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளியும் வென்று, இந்திய கொடியை கௌரவமாக தன் தோள்களில் ஏந்தினார்.
இந்தியாவின் முக்கிய நம்பிக்கையான மாரியப்பன் கடந்த 21ம் தேதி ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
T63 பிரிவில் உயரம் தாண்டுதலில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், சாம்பியன்ஷிப் ரெக்கார்டையும் முறியடித்து அசத்தியிருக்கிறார்.
இதனை மேலும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இனி உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில், சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் 1.88 மீட்டர் சாதனை தான், உச்சபட்ச சாதனையாக இருக்கக் கூடும்.
இதற்கு முன்னதாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சரத் குமார் என்பவர், 1.83 மீட்டர் உயரம் தாண்டியிருந்ததே உச்சபட்ச சாதனையாக இருந்தது வந்தது.
தற்போது மாரியப்பன் அதனை முறியடித்துள்ளார். ரியோ பாராலிம்பிக் தொடரில் தங்கம் வென்றது முதலே தங்கமகன் என அழைக்கப்படும் மாரியப்பன் தங்கவேலு, தன்னை சார்ந்த பல்வேறு கட்ட பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், விளையாட்டின் மீதான தனது உழைப்பை முழுமையாக கொடுத்துக் கொண்டிருந்தார்.
அதற்கு பலனாக கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரிய போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. “இவ்வளவு தூரம் வந்துட்ட, இன்னும் கொஞ்சம் அடி எடுத்து வச்சா இன்னொரு முறை இந்த உலகத்தை வாங்கலாம்” என நம்மை ஊக்கப்படுத்துபவர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம்.
அப்படி ஒவ்வொருவரின் ஊக்கமும் தான், எதிர்வரும் பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் மாரியப்பன் தங்கவேலுவை இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் வென்று கொடுக்க செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை…!