மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ளது.
6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ளது.
அதன்படி உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3-ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
நாளை தேர்தல் என்பதால் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.