காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீசார் கரை சுற்றுபுதூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைசுத்துப்புதரை சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், கடந்த 4ஆம் தேதி வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு, பாதி உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் அவர் எழுதியதாக சில கடிதங்களை கைப்பற்றிய தனிப்படை போலீசார், கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்காததால், ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜெயக்குமார் வீடு, தோட்டம், காங்கிரஸ் மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் குழு குழுவாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.