தமிழக கல்லூரி பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திர போராட்டம் முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாட்டை ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
விழாவில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இரண்டாவது நாளாக நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர், தமிழக கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத் திட்டங்கள் குறித்து விமர்சித்த அவர், தமிழக கல்லூரி பாடத்திட்டங்களில் வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் பாடங்களை வைக்காமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
அதேசமயம், திராவிட இயக்க கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். குறிப்பாக, தேசிய அளவிலான சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பினார்.