இந்தியத் தொலை தொடர்பு சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலைcன்ஸ் நிறுவனம், ஆப்பிரிக்கா சந்தையில் கால் பதித்துள்ளது. ஆப்பிரிக்காவில் அதிவேக 5 ஜி சேவையை வழங்குவதற்காக, ஆப்பிரிக்க தொலை தொடர்பு நிறுவனமான (NGIC) நெக்ஸ்ட் ஜென் இன்ஃப்ராகோ உடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய தொலை தொடர்பு சந்தையில் பாரத் ஏர் டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
ஏற்கெனவே, பல ஆண்டுகளுக்கு முன்பே, பாரதி ஏர்டெல் ஆப்பிரிக்காவின் கிழக்கு,மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சுமார் 14 நாடுகளில் தனது கடையை விரித்து விட்டது. ஆப்பிரிக்காவில் உள்ள அரசு தொலைத்தொடர்பு துறை சேவைகளை பாரதி ஏர்டெல் நிறுவனம் தான் வழங்கி வருகிறது.
இந்திய தொலை தொடர்பு துறையில் தனிக் காட்டு ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்த , ‘ஏர்டெல்’ லுக்குப் போட்டியாக களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ.
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது தொலைத்தொடர்பு சேவைகளை 1.52 சதவீத சந்தைப் பங்குடன் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ, தொடங்கிய வேகத்திலேயே, அபார வளர்ச்சியைக் கண்டது.
இந்தியாவில் தனது சேவைகளை அறிமுகப்படுத்திய எட்டு ஆண்டுகளுக்குள், இந்திய தொலைத்தொடர்பு சந்தையின் வயர்லெஸ் பிரிவில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்ட நிறுவனமாக உருவெடுத்த ரிலையன்ஸ் ஜியோ. குறிப்பாக ஏர்டெல்லை விட, 32 சதவீத சந்தைப் பங்குடன் இத்துறையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் தான் , ஆப்பிரிக்காவின் கானாவில்(GHANA) நாடு முழுவதும் மலிவு விலையில் 5G மொபைல் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்காக ஒரு புதிய வர்த்தக கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
கானா அரசு, Ascend Digital, K-NET, Radisys, Nokia மற்றும் Tech Mahindra, MNO எனப்படும் மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்கள், AT கானா மற்றும் டெலிசெல் கானா, ஆகியவை இணைந்து NGIC நெக்ஸ்ட்-ஜென் இன்ஃப்ராகோ என்ற இந்த புதிய கூட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றன.
இந்த அமைப்புக்குத் தான், நாடு முழுவதும், 5ஜி சேவைகளை வழங்க கானா அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆறு மாதங்களுக்கு பின் இதே நிறுவனமே ஆப்பிரிக்கா முழுவதும் 5ஜி சேவைகளை வழங்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் மும்பையில் கையெழுத்தானது.
மலிவு விலை கைபேசிகள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, உள்ளூருக்கு ஏற்ற அம்சங்களுடன் , இந்தியாவை முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள ( NGIC) நெக்ஸ்ட்-ஜென் இன்ஃப்ராகோ திட்டமிட்டுள்ளது.
கானா குடியரசின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கான அமைச்சர் ( Ursula Owusu-Ekuful ) உர்சுலா ஓவுசு-எகுஃபுல் கூறும் போது, இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை மொபைல் டேட்டா பயன்பாடு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, அதை அப்படியே கானாவில் செயற்படுத்த இருப்பதாக பெருமிதமாக கூறியுருக்கிறார்.
கானாவின் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டுக்கும் உதவும் சேவைகள், மலிவு விலையில் பிராட்பேண்ட் சேவைக்கான உள்கட்டமைப்பை உருவாக்கி ,கானாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி உதவும் வகையில் இந்த திட்டத்தை உருவாக்கி இருப்பதாக ரிலைன்ஸ் ரேடிசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் பிக்ஷேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே, தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள 21 நாடுகளில் தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வந்த MTN நிறுவனத்தின் பங்குகளை 2008 ஆம் ஆண்டு ஏர்டெல் வாங்கியது. அதனால்,தென்னாப்பிரிக்காவின், இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமானது பாரதி ஏர்டெல்.
இந்தப் போட்டிக் களத்தில் தான் இப்போது ரிலையன்ஸ் இறங்கியுள்ளது. ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கும் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலுக்கும் தொழில் போட்டி ஆப்பிரிக்காவில் தொடங்கி விட்டது. யாரை யார் வெல்லுவாரோ என்று தொழில்துறை சார்ந்தவர்கள் பந்தயம் கட்டத் தொடங்கி விட்டார்கள் என்றே கூறலாம்.