பொது இடங்களில் பேனர்கள் வைக்க நீதிமன்றங்கள் தடை விதித்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியும், சென்னையில் பேனர் வைக்கும் கலாசாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விளம்பர பேனர்களை அனுமதியின்றி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு…!
சினிமா, டிவியில் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட காலம் போய், பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் கலாசாரம் பரவியது. சினிமாவில் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பேனர்கள் வைத்து கொண்டாடியது போன்று, பிரபல வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொதுஇடங்களில் விதவிதமாக பேனர்களை வைத்தன.
இந்த பேனர் கலாசாரம், இந்தியாவில் இப்போது தோன்றியது அல்ல. 90-களுக்கு முந்தைய காலம் முதலே இருந்துள்ளது. 2000-த்திற்கு பிறகு விளம்பர பேனர் வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் வளர்ந்தது. இப்படியாக பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள், தற்போது மனித உயிருக்கே உலை வைக்க கூடியதாக மாறியுள்ளது.
கடந்த 13 ம் தேதி மும்பையில் பெரிய புழுதி புயல் தாக்கியதில், சேதா நகர் பகுதியில் 120 அடி உயரத்தில் வைக்கப்பட்ட 250 டன் விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். சுமார் 70 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விளம்பர பேனர்கள் சரிந்து பலர் படுகாயம் அடைந்ததுடன், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து 23 வயது இளம்பெண் பலியானார். இதையடுத்து, பேனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இதேபோல், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த புதுப்பாலம் பிரிவு அருகே பேனர் விழுந்து 3 தொழிலாளர்கள் பரிதாமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் விளம்பர பலகைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் தடை செய்திருந்த நிலையில், கடந்த 2023 ஜூன் 9ஆம் தேதி அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைப்பது குறைந்து வந்த நிலையில், சென்னையில் மீண்டும் விளம்பர பேனர் கலச்சாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விளம்பர பேனர்களால் உயிருக்கு ஆபத்து என்றால், சென்னையில் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ள செல்ஃபோன் டவர்கள் எப்போது சரிந்து விழுமோ என்ற மோசமான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
பெரிய அளவிலான விளம்பர பலகைகள் வைக்க உரிய உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்றும், உறுதி தன்மை இல்லாத பட்சத்தில், பேனர் வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறார் சென்னை மாநகராட்சி ஆனையர் ராதாகிருஷ்ணன்.
விதிகளை மீறி விளம்பர பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.