மணப்பாறை அருகே உள்ள தானா முளைத்த மாரியம்மன் கோயிலில் பூதங்களுக்கு திருமணம் செய்யும் விநோத படுகளம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணப்பட்டியில் தானா முளைத்த மாரியம்மன் கோயிலில் படுகளம் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது.
9 கிராமங்கள் கொண்டாடும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான படுகளம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூங்கில் குச்சிகளால் பெரிய வடிவில் வடிவமைக்கப்பட்ட ஆண், பெண் பூதங்களுக்கு திருமணம் செய்யப்பட்டது.
பின்னர் சின்னமணப்பட்டியில் இருந்து இரு பூதங்களும் காட்டுப்பகுதி வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணப்பட்டிக்கு தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கிராம மக்கள் எடுத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற படுகளம் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆதிவாசிகள், கரடி, ராணுவ வீரர்கள் போன்ற வேடங்களில் வந்த ஆடிப்பாடி தங்களின் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
நிறைவாக மணப்பட்டியில் உள்ள கோயில் முன்பு பூதங்கள் மற்றும் வேடமணிந்து வந்த இளைஞர்கள் முன்னும், பின்னுமாக ஓடி படுகளத்தை நிறைவு செய்தனர்.
இதனை தொடர்ந்து தானா முளைத்த மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.