ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் கை அசைவுகளைக் கூட வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பொதுகூட்டம் ஒன்றில் உரையாற்றும் வீடியோவை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். கூட்டத்தில் உரையாற்றும்போது நவீன் பட்நாயக்கின் கைகள் நடுங்கிய நிலையில், மக்கள் பார்வைக்கு தெரியாத வகையில் அவரது கைகளை வி.கே.பாண்டியன் நகர்த்தி வைக்கும் காட்சி அதில் இடம் பெற்றிருந்தது.
நவீன் பட்நாயக்கின் கை அசைவுகளைக் கூட வி.கே. பாண்டியன் கட்டுப்படுத்துவதாகவும், ஒடிசாவின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவே நடுக்கம் ஏற்படுவதாகவும் ஹிமந்த பிஸ்வா சர்மா அதில் கூறியிருந்தார். ஒடிசாவைச் சேர்ந்தவர்களே அம்மாநிலத்தை ஆளும் ஆட்சியை வழங்குவதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது பதிவில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், சிறிய விஷயங்களைக் கூட பிரச்சனைகளாக மாற்றும் பாஜக, தற்போது தமது கைகள் குறித்து விவாதிப்பதாகவும், இந்த தந்திரங்கள் பலனளிக்காது என்றும் கூறியுள்ளார்.