தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றால அருவிக்கு செல்ல வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையே அனுமதிக்கப்படுவதால், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியிருப்பதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. எட்டு நாட்களுக்குப் பிறகு அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த அருவியை மீண்டும் வனத்துறையே பராமரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, பழைய குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அருவிக்கு செல்லும் வழியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள்முதியவர்கள்,பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.