மயோனெய்ஸ் (Mayonnaise) எனப்படும் இறுக்கமான சுவையூட்டி க்ரீம், சான்ட்விச், பிரியாணி, ஜங்க் ஃபுட், துரித உணவுகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் பொருளாக மாறியுள்ள மயோனைஸ் கலந்த உணவை சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!
தமிழர்கள் பரம்பரிய மிக்க உணவுகளை உட்கொண்டு 100 வயது வரை நலமுடன் வாழ்ந்து வந்தனர். வரகு, சாமை , தினை, கம்பு, சத்துமிக்க அரிசி வகைகளை உண்டு வந்த தமிழக மக்கள், தற்போது டிஜிட்டல் வாழ்க்கைக்கு ஏற்ப ஜங்க் ஃபுட் மீது நாட்டம் அதிகரித்துள்ளது.
பர்கர்கள், பீட்சா அல்லது மோமோஸ் போன்ற உணவுகளை குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை வீட்டில் இருந்தபடி ஆர்டர் செய்து சாப்பிடும் கலச்சாரம் தற்போது மேலோங்கியுள்ளது. இந்த உணவுகள் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா? என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பர்கர்கள், பீட்சா அல்லது மோமோஸ் போன்ற உணவுகளில் சுவையைக் கூட்ட மயோனைஸ் என்ற பொருள் சேர்க்கப்படுகிறது. இதனால் தான் இந்தவகை பொருட்களை மக்கள் மீண்டும் மீண்டும் வாங்கி சாப்பிடுகின்றனர். ஒரு சிலர், மயோனைஸ் க்ரீமை, சாண்ட்விச், பாஸ்தா, கீரில் சிக்கன் , தந்தூரி உள்ளிட்டவைகளுடன் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கேரளாவில், திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், மயோனைஸ் கலந்த உணவை சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
மயோனைஸில் அதிக அளவு ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இதனை அதிகமாக உட்கொள்வது மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதுடன், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
குறிப்பாக மயோனைஸ் கலந்த துரித உணவுகள் மற்றும் பிரியாணி இரவு நேரங்களில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது பிற்பகலில் தொடங்கி விடிய விடிய ஓட்டல்களில் விற்பனை செய்யப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மயோனைஸ் கலத்த உணவுகளை தான் விரும்பி கேட்கிறார்கள் என்கிறார் உணவக உரிமையாளர் ராஜா.
மயோனைஸ் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறும் ராஜா, தரமான மயோனைஸ் எப்படி இருக்கும் என்பது குறித்தும் விரிவாக விளக்குகிறார்.
மயோனைஸ் நம் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால், வீட்டில் சமைத்து உண்பது தான் நல்லது. அதைவிட்டு, சுவையாக கிடைக்கிறது என்பதற்காக, மயோனைஸ் கலந்த துரித உணவுகளை சாப்பிட்டு, பொதுமக்கள் நோய்களால் அவதிப்படக்கூடாது என்பது நோக்கமாகும்.