தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மக்களவை தேர்தலோடு ஒடிசா மற்றும் ஆந்திராவில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. 7-வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
147 தொகுதிகள் கொண்ட ஒடிசா சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 74 தொகுதிகள் தேவை. இதில், ஆளும் பிஜூ ஜனதா தளம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றுமென கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், நவீன் பட்நாயக் 6-வது முறையாக ஒடிசா முதலமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் குறித்த கருத்துகணிப்புகளில் மாறுபட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திர சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 88 தொகுதிகள் தேவை. S-GED, RISE, People’s Pulse போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரா, Atma Sakshi உள்ளிட்ட நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி நைன் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.