நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், அதிகபட்சமாக இரண்டு லட்சத்துக்கும் மேலான வாக்குகளுடன் நோட்டா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான பின்னணி என்ன? என்பத பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
1989ம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பாஜகவின் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்ற தொகுதி தான், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நாடாளுமன்றத் தொகுதி. 2019ம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷங்கர் லால்வானியையே இம்முறையும் வேட்பாளராக பாஜக அறிவித்திருந்தது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில், இந்தூர் தொகுதியில் அக்ஷய் காந்தி பாம்ப், வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில், வேட்புமனுவைத் திரும்ப பெறும் கடைசி நாளில்,தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதோடு மட்டும் இல்லாமல் ,உடனடியாக காங்கிரசில் இருந்து விலகி , பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் 72 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், தேர்தலில் வேட்பாளர் நிறுத்தியும் போட்டியிட முடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.
இப்படி, கடைசி நேரத்தில் தனது வேட்பாளர் வாபஸ் பெற்றதால், என்ன செய்வது என்று அறியாத காங்கிரஸ் கட்சியினர், நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தனர்.
இந்நிலையில் தான், இந்தூரில் பாஜக வேட்பாளர் ஷங்கர் லால்வானிக்கும் , நோட்டாவுக்கும் தான் போட்டி என்ற நிலை உருவானது.
இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகுள்இந்தூரில் பாஜக வேட்பாளர் ஷங்கர் லால்வானி 12 லட்சத்து 26751வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சஞ்சய் சோலங்கி 50, 524 பெற்றுள்ளார்.
இந்தூர் தொகுதியில், நோட்டா இது வரை இல்லாத அளவுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகள் பெற்று, இரண்டாவது அதிகபட்ச வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய தேர்தலில் நோட்டா இரண்டாவது இடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில், தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் நோட்டாவுக்கு 46,559 வாக்குகள் கிடைத்தன. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில், பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 51 ஆயிரத்து 660 வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருந்தன. இது அந்த தொகுதியில் பதிவான தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 5 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒவ்வொரு தேர்தல்களில் நோட்டாவுக்கு விழும் வாக்குகளின் எண்ணிக்கை கூடி கொண்டே தான் போகிறது. கடந்த 2014 தேர்தலில், நோட்டாவுக்கு 60,02,842 வாக்குகள் பதிவான நிலையில், 2019 தேர்தலில் 65,22,772 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.