தமிழகத் தேர்தல்களில் எப்போதுமே திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையேதான் போட்டி என்ற நிலை இருந்து வந்தது. இந்த தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாஜக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்களவை தேர்தலில் மூன்றாவது சக்தியாக பாஜக பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் பாஜக தனித்து கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக போட்டியிட்டது .
2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக இந்த முறை, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில், ஜி கே வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி மேலும் சில கட்சிகள் பாஜக தலைமையில் தேர்தலை சந்தித்தன.
இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிராக 23 தொகுதிகளில் பாஜக களமிறங்கியது. இதில் நான்கு தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டனர். பாஜகவின் மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டார்கள்.
போட்டியிட்ட 23 தொகுதிகளில் பாஜக 11.24 சதவீத வாக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்து 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 10.78 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. இதிலிருந்தே பாஜக தமிழகத்தில் கால் ஊன்றி விட்டது என்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது.
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் போட்டியிட்ட தெலுங்கானா முன்னாள் ஆளுனரும், புதுசேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநரும் ஆன தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னையில் வினோஜ் ,நீலகிரியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்னன், திருநெல்வேலியில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மதுரையில் இராமசீனிவாசன், தேனியில் டிடிவி தினகரன்,வேலூரில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளரான ஏ.சி.சண்முகம், ஆகியோர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும் பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணியும், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணியில் நின்ற தேர்தலில் 3.58 சதவீத வாக்குகளைப் பெற்ற போதும் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதற்கு முன் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 5.59 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது, தமிழகத்தில் பாஜக 11.24 சதவீத வாக்குகளை பெற்றிருப்பது ஒரு சாதனையாகவே பார்க்கப் படுகிறது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பாஜக தான் என்று தீவிரமாக சொல்லிவந்தார்.
மேலும் பாஜகவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பாதயாத்திரை சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த பாதயாத்திரைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
கடந்த ஜனவரி முதல் 12 முறைகளுக்கும் மேலாக பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ததும் மக்கள் மனத்தில் பாஜகவை நிலை நிறுத்தியுள்ளது.