பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே பிரதமர் நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு 18-வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வெற்றியையொட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமைக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் டோப்கே, மூன்றாவது முறையாக வெற்றிகரமாக பதவியேற்க வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் டோப்கேயின் அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பூடானுடனான மிகச்சிறந்த கூட்டாண்மைக்கு இந்தியா உயர் முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
பூடான் மற்றும் இந்தியா இடையேயான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் மீண்டும் தெரிவித்தார்.
இந்தியா-பூடான் ஒத்துழைப்பு அனைத்து மட்டங்களிலும் அதிகபட்ச நம்பிக்கை, நல்லெண்ணம், பரஸ்பர புரிதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது, மேலும் இது மக்களுக்கு இடையேயான வலுவான இணைப்புகள், நெருங்கிய பொருளாதார மேம்பாட்டு கூட்டாண்மை ஆகியவற்றால் வலுப்படுத்தப்படுகிறது.