46 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளை தவிர இதர வகுப்புகளுக்கு வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
வழக்கமாக மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் நடப்பாண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் 46 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு முதல் வாரத்திலேயே பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கோடை விடுமுறை நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாட்டில் இன்று முதல் திறக்கப்பட்டது. அதில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
அப்போது கடந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் முதல் நாள் என்பதால் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவெற்றனர். அப்போது பேசிய பள்ளி மாணவி ஒருவர் புது நண்பர்களோடு படிப்பதற்கு ஆர்வமாக உள்ளதாகவும், ஆசிரியர்களின் உதவியோடு இந்த ஆண்டும் சிறப்பாக தேர்வினை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.