பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 7 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த முறை நிதியமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.
இதேபோல ஜார்க்கண்ட் மாநிலம் கோடர்மா தொகுதியில் வென்ற பாஜகவை சேர்ந்த அன்னபூர்ணா தேவி கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அன்னபூர்ணா தேவி கடந்த அமைச்சரவையில் கல்வித்துறை இணையமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக கூட்டணி கட்சியான அப்னா தள தலைவர் அனுபிரியா படேல், மீண்டும் மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர் கடந்த முறை மோடி அமைச்சரவையில், வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சராக பதவி வகித்தார்.
பெங்களூரை சேர்ந்த ஷோபா கரந்த்லஜே இந்த முறையும் மத்திய இணையமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் கடந்த முறை வேளாண்துறை இணையமைச்சராக பதவி வகித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் ரேவர் தொகுதியில் வென்ற பாஜகவை சேர்ந்த ரக்ஷா கட்சே, மத்திய இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலம் தார் தொகுதியில் வென்ற பாஜக நிர்வாகி சாவித்ரி தாக்குர், குஜராத் மாநிலம் பாவ்நகர் தொகுதியில் வென்ற பாஜக பிரமுகர் நிம்புபென் பம்பானியா ஆகியோரும் மத்திய இணையமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டார்.
மத்திய அமைச்சரவையில் 3 பெண்களுக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.