தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளே பள்ளிக்கு வர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, முசிறி, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. தனியார் பள்ளியில் பன்னீர் தெளித்தும், ரோஜாப்பூக்கள் வழங்கியும் ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.
மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உடமைகளுடன் வருகை தந்தனர். கோடி விடுமுறை முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு சக நண்பர்களை சந்தித்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் 530க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. காலை முதலே ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். இந்நிலையில் பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் பூக்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
இதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் வருகை தந்தனர்.
சந்தப்பேட்டை அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வண்ண பலூன்கள் வழங்கப்பட்டு மலர்களை தூவி வரவேற்பளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் வ்ழங்கப்பட்ட நிகழ்வு பெற்றோர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்தனர். விடுமுறை முடித்து மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்கள் சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர்.
ஈரோடு மாநகரின் எஸ்கேசி சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பழைய மாணவர்கள் ட்ரம்ஸ் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதேபோல பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள ஜிடிஎஸ் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வருகை புரிந்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியும், ஆதார் பதிவு முகாம் மற்றும் அஞ்சல் பதிவு கணக்கையும் தொடக்கி வைத்தார்.