திருப்பத்தூரில் கார் நிறுத்துமிடத்தில் பதுங்கியிருந்த சிறுத்தையை 11 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையைத் தேடி வந்த நிலையில், அந்த சிறுத்தை அருகிலிருந்த பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. அங்கிருந்த தொழிலாளியைத் தாக்கிய சிறுத்தை, அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்திற்குள் புகுந்தது.
இதனால், சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினரும், காவல்துறையினரும் திணறி வந்தனர். மேலும், அந்த கார் நிறுத்துமிடத்தில் சிக்கிக்கொண்ட ஐந்து பேரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
விடிய விடிய சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினர், சுமார் 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை காட்டிற்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மண்டல வன பாதுகாவலர் தெரிவித்தார்.