தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மீண்ட அய்யனார் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யாபட்டியில் அமைந்துள்ள ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோயிலில் கருட தரிசனத்துக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிலை பிரதிஷ்டை செய்தபோது கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.