சென்னை விமான நிலையத்தில், இனி பயண சீட்டுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக டிஜி யாத்ரா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜி யாத்ரா சேவை என்றால் என்ன? அதனுடைய வசதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நமது விமான பயணத்தை சீராகவும் எளிமையாகவும் மேற்கொள்வதற்கு ஒரு புதிய திட்டத்தினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுதான் டிஜி யாத்ரா வசதி. கடந்த மே 6ம் தேதி முதல் சென்னையில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
டிஜி யாத்திரை என்பது ஆவணங்கள் ஏதும் இல்லாமல் முகத்தை மட்டும் அடையாளமாக கொண்டு பயணிக்கும் வசதி. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அடையாள அட்டை , விமான நிலைய நுழைவுச் சீட்டு போன்ற காகித ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை. விமான நிலையத்துக்குள் நுழையும் போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தை காட்டினால் போதும்.
இதற்காக பயணிகள் தங்கள் புகைப்படம், ஆதார் எண் மற்றும் பயணம் தொடர்பான விவரங்களை நவீன தொழில் நுட்பம் கொண்ட டிஜி யாத்ரா செயலியில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.
டிஜி யாத்ரா திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா, புனே, ஐதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில் இந்த சேவை சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 4 இன் அனைத்து நுழைவு வாயில்களிலும் கிடைக்கிறது, இந்த திட்டம் உள்நாட்டு பயணிகளுக்கு எளிமையான பயணத்தை ஏற்படுத்தி தருவதோடு இந்த சேவை போர்டிங் கேட்களில் வரிசையில் செலவழிக்கும் நேரத்தை கணிசமாகவும் குறைக்கிறது, இது ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் சிறப்பாக்குவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் வளர்ச்சி பாதையை நோக்கிக் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சிகளில் மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் டிஜி யாத்ரா திட்டம் பெரிய மைல்கல் திட்டமாக விளங்குகிறது.