மேற்கு வங்க ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ரயில் விபத்து குறித்த செய்தி வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திப்பதாகவும் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க ரயில் விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், அதிகாரிகளிடம் பேசி நிலைமையை கேட்டறிந்ததாக கூறியுள்ளார்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள அவர், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேற்கு வங்க ரயில் விபத்து செய்தியை கேட்டு வருத்தம் அடைந்தாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், விபத்து குறித்த விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ரயில்வே போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.