ஸ்ரீநகரில் ஜூன் 21ம் தேதி நடைபெறும் 10வது சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக சுயம் மற்றும் சமூகத்திற்கான யோகா என உள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பார்வையற்றோர் யோகாவைக் கற்றுக் கொள்ளவும், பயிற்சி செய்ய வசதியாக, பிரெய்லி ஸ்கிரிப்ட்டில் உள்ள பொதுவான யோகா நெறிமுறை புத்தகத்தை மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் அறிமுகப்படுத்தினார். இந்த புத்தகம் குழந்தைகளுக்கு ஆர்வத்துடனும் பொழுதுபோக்குடன் யோகா கற்றுக் கொள்ளவும் பயிற்சி செய்யவும் உதவும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்,
தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதில் யோகாவின் இரட்டைப் பங்கை இந்த ஆண்டின் தீமாக எடுத்துக்காட்டுகிறது. யோகா சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் உடல், மன மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வளர்க்கிறது என்றார். சமீப ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பது, சமூகங்களில் யோகாவின் ஆழமான தாக்கத்தை பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
ஜூன் 21ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் 10வது சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் எனத் தெரிவித்தார்.
ஒரு சிறப்பு முயற்சியாக, இந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில் ‘விண்வெளிக்கான யோகா’ என்ற தனித்துவமான முயற்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் பொதுவான யோகா நெறிமுறை வழிகாட்டுதல்களின்படி ஒன்றாக யோகா செய்வார்கள்.
ககன்யான் திட்டத்தின் குழுவும் இந்த நிகழ்வில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் சர்வதேச யோகா தினத்தின் உலகளாவிய பிரச்சாரத்தில் சேரும்.
யோகா துறையில் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிக்க, ஆயுஷ் அமைச்சகம் MyGov போர்டல் மற்றும் MyBharat போர்டல் ஆகியவற்றில் யோகாடெக் சவாலை ஏற்பாடு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.