வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் கால்கள் இரண்டும் துண்டான நிலையில், சுமார் 25 கிலோ மீட்டருக்கு இளைஞரின் சடலம் ரயிலில் இழுத்து வரப்பட்டது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில், நள்ளிரவு சுமார் 11:45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் வந்தது.
அப்போது என்ஜின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று சிக்கி இருந்தது.
அந்த நபர் சிவப்பு நிற டி-ஷர்ட், நீல நிற பேண்ட் அணிந்திருந்தார்.
அவரது கால்கள் எங்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. போலீஸ் விசாரணையில், சுமார் 25 கிலோமீட்டர் தூரம் அந்த இளைஞரின் சடலம் இழுத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது.
இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.