தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டிய நிலையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
வேலூரில் 98 டிகிரி பாரன்ஹீட் அளவீட்டில் கடுமையான வெயில் வாட்டிய நிலையில் , சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலு மங்காப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இதே போல, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.