இந்தியாவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
பிரிட்டனை சேர்ந்த முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் 2024 ஆம் ஆண்டுக்கான தனியார் சொத்து புலம்பெயர்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
வேக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடான இந்தியா, கோடீஸ்வரர்களின் இடம்பெயர்வு பட்டியலில் உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 5100 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ள நிலையில், நடப்பாண்டில், 4300 கோடீஸ்வரர்கள் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வேறு நாடுகளுக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சீனாவிலிருந்து 15,200பேர்களும், பிரிட்டனிலிருந்து 9500 பேர்களும் புலம் பெயர்ந்த காரணத்தால், இந்தப் புலம்பெயர்வு பட்டியலில், சீனா முதலிடத்தையும், பிரிட்டன் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது 1200 பேர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால்,தென்கொரியா நான்காவது இடத்தில் இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான புலம் பெயரும் கோடீஸ்வரர்களில், பெரும்பாலோனோர் செல்லும் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இரண்டு இடங்களில் அமெரிக்காவும், சிங்கப்பூரும் இருக்கின்றன.
கோடீஸ்வரர்களுக்குச் சாதகமான அரசு கொள்கைகள், நிலையான அரசியல் கட்டமைப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு, வணிகம் செய்வதற்கான அமைதியான சூழல், பல்வேறு தரப்பட்ட முதலீட்டு வாய்ப்புகள், தங்க விசா எனப்படும் golden visa வழங்கும் அரசின் ஊக்குவிப்பு பரந்த அளவிலான குடியிருப்பு , என்று ஐக்கிய அரபு அமீரக அரசு வெளிநாட்டு கோடீஸ்வரர்களை ஈர்க்கின்ற வகையில் செயல்பட்டு வருகிறது. அதனாலேயே கோடீஸ்வரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை நாடுகின்றனர் என்று இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
மேலும், 2024ம் ஆண்டு சுமார் 6,700 கோடீஸ்வரர்களை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்க தயாராக இருப்பதாகவும் தெரிய வருகிறது.