கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிற்கு எதிராக 45 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார்.
கள்ளச்சாராயத்தினை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையும், தமிழக அரசும் செயலிழந்துள்ளதாகக் கூறிய அவர், மரக்காணம் உயிரிழப்பிற்கு பிறகாவது தமிழக அரசு விழித்து கொண்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
தமிழக சட்டமன்ற கூட்டம் கூடுவதால் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை என முதலில் தமிழக அரசு கூறியதாகவும் , அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு கள்ளச்சாராயம்தான் காரணம் என்று தமிழக அரசு ஒப்புக்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை என வலியுறுத்தியுள்ள அவர், கள்ளச்சாராயம் மட்டுமல்ல டாஸ்மாக் மதுவினால் மக்கள் இறந்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், நடப்பு கூட்டத்தொடரிலேயே முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான அறிவிப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.