சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவில் உள்ள தர்மசாலாவில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். திபெத் பிரச்சினைக்குத் தீர்வு காண, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா சட்டம் இயற்றியிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏற்கனவே அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்பட்ட, ‘திபெத்-சீனா பிரச்னையைத் தீர்ப்பதற்கான சட்ட மசோதா’ ஒன்றை அண்மையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைநிறைவேற்றியது. இந்த மசோதா படி திபெத்தின் வரலாறு, மக்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து சீனா பரப்பும் ‘தவறான தகவல்களை’ எதிர்த்துப் போராட அமெரிக்கா நிதி வழங்கும்.
மசோதா நிறைவேற்றிய ஒரு சில நாட்களில், கடந்த புதன்கிழமை, அமெரிக்காவின் வெளியுறவுக் குழுத் தலைவர் மைக்கேல் மெக்கால் மற்றும் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு, இந்தியாவுக்கு வந்து தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்தது.
அமெரிக்க உயர்மட்டக் குழுவில் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் டெக்சாஸின் குடியரசுக் கட்சியின் தலைவரும், அமெரிக்கக் காங்கிரஸின் வெளியுறவுக் குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் ஆகியோர் உள்ளனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுடனான தனது உறவைச் சீராக்க ஜோ பைடன் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் பின்னுக்குத் தள்ளும் என்று சீனா கடுமையாக எச்சரித்தது.
முன்னதாக, 2022-ஆம் ஆண்டில், நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்டதிலிருந்தே, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அனைத்து தரப்பட்ட உறவும், ஒத்துழைப்பும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது.
திபெத் சிக்கலில் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை விளக்கிய மெக்கால், சீனாவின் ஒரு பகுதி திபெத் என்று சீனா உரிமை கோருவதைக் கேலிக்குரியது என்று விமர்சித்திருந்தார். மேலும் அமெரிக்காவில் நிறைவேற்றிய மசோதா உட்பட பல விவகாரங்கள் குறித்து தலாய் லாமாவுடன் விவரித்து இருப்பதாகவும், திபெத் மக்களுடன் அமெரிக்கா எப்போதும் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களின் கருணையால், தாயகத்தை விட்டு வெளியேறிய திபெத்தியர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழவும், துன்புறுத்தலுக்கு அஞ்சாமல் தங்கள் மதத்தைப் பின்பற்றவும் முடிகிறது என்று கூறிய மெக்கால் நிச்சயம் விரைவில், தலாய் லாமாவும் அவரது மக்களும் திபெத்துக்கு அமைதியுடன் திரும்புவார்கள் என்றும் நம்பிக்கையை வெளிப்படுத்திருக்கிறார்.
அமெரிக்க குழு தலாய் லாமாவைச் சந்தித்ததைக் கடுமையாக விமர்சித்துள்ள, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்,“14வது தலாய் லாமா மதக் குரு அல்ல என்றும், சீன எதிர்ப்பு பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் குற்றவாளி என்றும் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமா பற்றிய இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாகவும் நிலையானதாகவும் உள்ளதாக தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்திய மக்களால் ஆழமாக மதிக்கப்படும் தலாய் லாமா, ஒரு மரியாதைக்குரிய மதத் தலைவர் என்றும், அவரது மத மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அவருக்குரிய மரியாதையும் சுதந்திரமும் அளிக்கப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார்.
1935ம் ஆண்டு பிறந்த டென்சின் கியாட்சோ, தனது இரண்டாவது வயதில் அடுத்த தலாய் லாமா என்று அறிவிக்கப்பட்டார். பிறகு 1940ம் ஆண்டு, 14 வது தலாய் லாமாவாக அதிகாரப் பூர்வமாக பதவி ஏற்றுக்கொண்டார். 1950ம் ஆண்டு சீனா படையெடுப்பால், திபெத்தில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1959 ஆம் ஆண்டு, இந்தியா, தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தது.
அன்றிலிருந்து இந்தியாவில் உள்ள இமாச்சல் பிரதேசத்தில் தர்மசாலாவில் மடாலயம் அமைத்து, தலாய் லாமா வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.