நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்த நிலையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் நேரத்தை இழந்த 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான நெட் தேர்வு வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகள் தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சை எழுந்ததால், தேசிய தேர்வுகள் முகமையை மேம்படுத்த 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது.
இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 12 பேரும், குஜராத்தில் பயிற்சி மைய இயக்குநர் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நீட் தேர்வு விவகாரத்தை சிபிஐ வசம் மத்திய கல்வி அமைச்சகம் ஒப்படைத்த நிலையில், சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீட் வழக்கை சிபிஐ கையில் எடுத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.