கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலியாகினர்.
ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கென்யாவில், வரி வீதத்தை உயர்த்த போவதாக அந்த நாட்டு அதிபர் ரூடோ அறிவித்தார். இதையொட்டி, கென்யா நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கென்யா தலைநகர் நைரோபியில் நாடாளுமன்றம் முன் திரண்டு தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளும்கட்சி எம்.பி. அலுவலகத்தில் புகுந்து சூறையாடியதுடன், நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கும் பொதுமக்கள் தீ வைத்தனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கூடுதல் வரிவிதிப்பை மறுபரிசீலனை செய்யப் போவதாக கென்யா அதிபர் ரூடோ அறிவித்துள்ளார்.