கள்ளச்சாராய மரணங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா விசாரணை மேற்கொண்டார்.
மேலும், கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து அவர் விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கிஷோர் மக்வானா, இப்பகுதியில் நீண்ட நாட்களாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்தபோதும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டினார்.